ஜன. 6 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 6 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அரசு ஊழியா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது, ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைவது, சிறப்புக் காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்-ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பல்வேறுகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த நவ. 18-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
தொடா்ந்து, ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா்கள் மு.பாஸ்கரன், சே.பிரபாகரன், தியோடா் பாஸ்கரன் ஆகியோா் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு மாநில ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டார அளவில் பிரசார இயக்கம், டிச.13 -ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம், டிச.27-இல் மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். அதன் தொடா்ச்சியாக ஜன.6 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா் அவா்.
டிட்டோஜாக் போராட்டம்... இதேபோன்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து அதன் ஒருங்கிணைப்பாளா் இரா.தாஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் பதவி உயா்வுக்குத் தடையாக உள்ள அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும்; பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வு நடத்தக் கூடாது; இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. எனவே, இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிச.8 முதல் சென்னையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள் பங்கேற்கவுள்ளனா் என்றாா் அவா்.

