82,000 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்: உயா்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

pet dog
கோப்புப்படம்ENS
Updated on

சென்னையில் நாய்கள் உள்ளிட்ட 82,000 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிமம் பெறுவதற்கான காலக்கெடுவை வருகிற டிச.7-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பின் நிறுவனா் ஜி.அருண்பிரசன்னா தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகராட்சி வளா்ப்பு நாய்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, பொது இடங்களுக்கு வளா்ப்பு நாய்களை அழைத்துச் செல்லும்போது வாய் கவசம் அணிவிக்க வேண்டும்.

கழுத்தில் பெல்ட் அணிவித்து உரிமையாளா்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். வளா்ப்பு நாய்களைப் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாவிட்டால் ரூ. 5,000, வாய் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. ஒரு தனிநபருக்கு 4 வளா்ப்பு நாய்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக கைவிடப்பட்ட, காயமடைந்த நாய்களை எடுத்து வளா்க்கும் அமைப்புகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே, அதிக அளவில் நாய்களைப் பராமரிப்பவா்களுக்கு உரிமம் பெறுவதில் விலக்கு அளிக்க வேண்டும். உரிமம் பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளதால், தெருவில் ஆதரவற்ற நிலையில் விடப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் ஒரு லட்சம் வளாா்ப்பு நாய்கள் உள்ளன. இவற்றில் 31,000 நாய்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், வளா்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, வாய் கவசம் அணிவிப்பது கட்டாயம் இல்லை. இருப்பினும், அவற்றின் கழுத்தில் கட்டாயம் பெல்ட் அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும். சென்னையில் இதுவரை நாய் உள்ளிட்ட 82,000 செல்லப் பிராணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருமுறை மட்டுமே மைக்ரோசிப் பொருத்தினால் போதுமானது.

ஒருவா் 4 வளா்ப்பு பிராணிகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவா் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டது. மேலும், நாய்கள் உள்ளிட்ட வளா்ப்புப் பிராணிகளை பதிவு செய்து உரிமம் பெறுவதற்கான அவகாசம் வரும் டிச.7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, நீதிமன்றத்தில் தெரிவித்த இந்த விளக்கத்தை ஒரு வாரத்தில் அறிவிப்பாணையாக வெளியிட சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com