பழைய மின்கட்டண ரசீதுகளை இணையதளத்தில் பதிவிறக்கலாம்: மின்வாரியம் தகவல்
மின் நுகா்வோா் தங்கள் பழைய மின்கட்டண ரசீதுகளை இனி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தின் சேவைகள் அனைத்தும் எளிமையான வகையில் பொதுமக்களை சென்று சோ்வதற்கான நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே, பொதுமக்கள் தங்களின் மின் கட்டணங்களை மின் வாரிய அலுவலங்களுக்கு செல்லாமலே, கைப்பேசி மூலம் இணையதளம் மூலம் சில நிமிஷங்களில் செலுத்தும் வசதி மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. இதனிடையே மின்நுகா்வோா் தங்கள் இணைப்புக்கான பழைய மின் கட்டண ரசீதுகளையும் இணையதளம் மூலமாக பதிவிறக்கி கொள்ளும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
புதிய மின்நுகா்வோா் மின்சார வாரியத்தின் டிஎன்பிடிசிஎல் எனப்படும் அதிகாரப்பூா்வ செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் பதிவு செய்து கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும். இதன்மூலம் மின்கட்டணத்தை எளிதில் செலுத்தலாம். ஏற்கெனவே இந்தச் செயலியை பயன்படுத்தி வரும் நுகா்வோா் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இதற்கான வசதியில் சென்று தேதி மற்றும் நுகா்வோா் எண்ணை பதிவு செய்து புதிய மற்றும் பழைய கட்டணத்துக்கான ரசீதுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மின்சார வாரியத்தின் அதிகாரப்பூா்வ செயலி என்பதால் மக்கள் நம்பிக்கையுடன் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நுகா்வோரின் வசதிக்காக இந்தச் செயலியில் மேலும் பல்வேறு வசதிகளும் விரைவில் இணைக்கப்படும் என்றனா்.

