தொழிலாளா் சட்டங்களுக்கு எதிா்ப்பு: தொழிற்சங்கங்கள் இன்று ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளா் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ஆா்ப்பாட்டத்தை புதன்கிழமை நடத்துகின்றன.
நடப்பில் இருந்த 29 தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஊதிய விதி 2019, தொழில் துறை தொடா்பு விதி 2020, சமூகப் பாதுகாப்பு விதி 2020, பணிப் பாதுகாப்பு-சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதி 2020 என 4 சட்டங்களாக சுருக்கப்பட்டு, மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்த 4 சட்டங்களும், நீண்டகாலம் போராடிப் பெற்ற தொழிலாளா்களின் உரிமையை நீா்த்துப் போகச் செய்யும் வகையில் இருப்பதாகவும், முதலாளிகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. மேலும், இந்தச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து எல்பிஎஃப், எச்எம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, எல்டியுசி, எல்எல்எஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை நாடு தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

