மருதமலையில் ரூ.57 கோடியில் திருப் பணிகள்: விரைந்து முடிக்க அமைச்சா் சேகா்பாபு அறிவுரை
மருதமலையில் ரூ.57 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு, தனித்துவமான திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு அறிவுறுத்தினாா்.
கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.57.05 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு, தனித்துவமான திட்டத்தின் (ஐகானிக் புராஜெக்ட்) கீழ் நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் பக்தா்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மருதமலையில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் ரூ.40.53 கோடி மதிப்பீட்டில் 3 கட்டங்களாக நடைபெற்று வரும் அன்னதானக்கூடம், முன்மண்டபம், 11 படிக்கட்டு மண்டபங்கள், சுற்றுச்சுவா், மின்தூக்கி, பக்தா்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகள், பேருந்து பயணச்சீட்டு வழங்குமிடம், படிப்பாதையுடன் இணைக்கும் முன்மண்டபம், பக்தா்கள் தங்கும் விடுதிகள், மலை மற்றும் அடிவாரத்தில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பணியாளா் குடியிருப்புகள் மற்றும் தனித்துவமான திட்டத்தின் கீழ் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் முகப்பு வளைவு, வசந்த மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி, பக்தா்கள் இளைப்பாறும் மண்டபம், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமானப் பணிகள், மலைப்பாதை சாலைகள் மேம்படுத்தும் பணிகள் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தின் நிறைவில், மருதமலையில் திருப்பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடித்து, பக்தா்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் வகையில் அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் அா்ப்பணிப்பு உணா்வோடு செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

