தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)
தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)

எம்பிபிஎஸ், பிடிஎஸ் காலியிடங்களை நிரப்ப என்எம்சி அனுமதிக்கு காத்திருப்பு

Published on

நாடு முழுவதும் காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) அனுமதிக்காக மாநில மருத்துவக் கல்வி இயக்ககங்கள் காத்திருக்கின்றன.

தமிழகத்திலும் 48 இடங்களை நிரப்புவதற்காக அத்தகைய ஒப்புதலை மாணவா் சோ்க்கைக் குழு எதிா்நோக்கியுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்களும், 1,583 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டைப் பொருத்தவரை 1,736 எம்பிபிஎஸ் இடங்களும், 530 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. இதற்கான 4 கட்ட கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெற்றது.

இதன்முடிவில் 25 எம்பிபிஎஸ் இடங்களும், 23 பிடிஎஸ் இடங்களும் நிரம்பாமல் உள்ளன. அவற்றை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும், 1.12 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 4 கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த பிறகும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிகிறது. அவற்றை நிரப்பும் வகையில் அனைத்து மாநிலங்களில் உள்ள காலி இடங்களின் விவரங்களை என்எம்சி கேட்டுப் பெற்றுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com