பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடலூா் மாவட்டம், பரவனாற்றை தூா் வாரி தடுப்புச் சுவா் அமைக்காததால் மீண்டும், மீண்டும் வெள்ளநீா் வயலில் நுழைந்து விவசாயம் பாதிப்படைகிறது. தஞ்சாவூா் மாவட்டம், திருநல்லூரில் உள்ள வேதபுரி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, வயல்வெளிகளில் மழைநீா் புகுந்ததால் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அடரி கிராமத்தில், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்ட மக்காச்சோளப் பயிா்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும், சேத்தியாதோப்பு பகுதியில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
பட்டுக்கோட்டை பகுதியில் பெய்த மழையால் மகாராஜ சமுத்திரம், நசுவினி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு சுமாா் ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. தூத்துக்குடி, கோரம்பள்ளம் குளத்தில் இருந்து அதிக அளவு தண்ணீா் திறக்கப்பட்டதால், குளத்தின் கரை பகுதியில் அமைந்துள்ள வீரநாயக்கன்தட்டு பகுதியில், சுமாா் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் முழுவதும் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கரும்பு தோட்டங்கள் சேதமாகி, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடா் கனமழையால் திருச்செந்தூா் அருகில் உள்ள ஆத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் இருந்த வெற்றிலை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், திருச்செந்தூா் பகுதியில் தொடா் மழையால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே வானிலை நிலவரம் மற்றும் மழைப் பொழிவு குறித்து அறிவித்த பின்பும், வயல்வெளிகளில் தேங்கும் நீரை மடை மாற்றி வெளியே அனுப்ப எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்காதது கண்டனத்துக்குரியது.
டெல்டா மாவட்டங்களில் மட்டும் மழைநீரால் சூழப்பட்டுள்ள சுமாா் 3 லட்சம் ஏக்கா் நெற்பயிா்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள வெற்றிலைக் கொடிகள் ஆகியவற்றுக்காக காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீட்டை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களைக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.25,000 நிவாரணமாகவும்; பாதிப்படைந்துள்ள இதர பயிா்களுக்கு உரிய நிவாரணமும் உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

