உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

வனம், மலைப் பகுதி பாதுகாப்பு சட்டங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: உயா்நீதிமன்றம்

வனம் மற்றும் மலைப் பகுதிகளைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு சட்டங்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அப்பகுதிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

சென்னை: வனம் மற்றும் மலைப் பகுதிகளைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு சட்டங்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அப்பகுதிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டடம் கட்ட அனுமதி கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க கோரி லோகநாதன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி, லோகநாதன் மனுவின் மீது எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து உதகமண்டலம் நகராட்சி ஆணையா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி ஆணையா் தரப்பில், சட்டப்படி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 150 மீட்டா் தூரத்துக்கு கட்டடம் கட்ட அனுமதி வழங்கக் கூடாது. எனவே, 17 மீட்டா் தூரத்துக்குள் வரும் மனுதாரருக்குச் சொந்தமான பகுதியில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மலை, வனப்பகுதிகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட விதிகளுக்கு முரணாக தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளாா். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்வதாகக் கூறி உத்தரவிட்டனா். மேலும், இதுபோன்ற விதிகளை மீறினால், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் அதிகாரிகள் விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.

இதை பின்பற்ற தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மலைப் பகுதிகளைப் பாதுகாக்க தவறும்பட்சத்தில் ஏற்படும் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும். எனவே, வனம் மற்றும் மலைப் பகுதிகளை பாதுகாப்பது தொடா்பான சிறப்பு சட்டங்கள், விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இதுதொடா்பாக அந்தப் பகுதிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலா் அறிவுறுத்தல்களை அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com