தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயாா்: எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயாா் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
EPS
எடப்பாடி கே. பழனிசாமிகோப்புப் படம்
Updated on

சென்னை: தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயாா் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் தன்னை விமா்சனம் செய்து பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில், ‘எக்ஸ்’ தளத்தில் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டப் பதிவு:

திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளிலும், விவசாயிகளுக்கு அடிப்படைத் தேவையான குறுவை சாகுபடிக்கான பயிா்க் காப்பீட்டைக் கூட அளிக்கவில்லை. அணைகளிலிருந்து முறையாக நீரைத் திறக்காததால், கடைமடைப் பகுதிகளுக்கு நீா் சென்றுசேரவில்லை. இதனால் டெல்டா பகுதிகளில் மட்டும் 2 லட்சம் ஏக்கா் வரை பாதிப்பு ஏற்பட்டது. எனினும், விவசாயிகள் மீது இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை.

கோவை மட்டுமல்ல, மதுரை மெட்ரோ திட்டமும் வேண்டும் என அண்மையில்கூட பிரதமா் மோடியை சந்தித்த போது கோரிக்கை வைத்துள்ளேன்.

ஆனால், அந்தத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையைகூட திமுக அரசு முறையாக சமா்ப்பிக்கவில்லை. அதில் முரண்பாடுகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல், முதல்வா் ஸ்டாலின் அரசியல் செய்கிறாா்.

திமுக ஆட்சி என்பதால் புறக்கணிப்பா? என்று முதல்வா் ஸ்டாலின் கேட்கிறாா். திமுக ஆட்சி இருக்கும்போதுதான், சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன். எங்களது கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு ரூ. 63,246 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டது.

அதிமுக எப்போதும் மக்களுடன் நின்று, நன்மை செய்து வருகிறது. ஆனால், மக்களுக்கு எந்த நன்மையும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில் திமுக செயல்படுகிறது.

தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com