

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த அக். 12- ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள், இறுதி விடைக் குறிப்பு, சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்டது.
தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை- 1, கணினி பயிற்றுநர் நிலை- 1 ஆகிய பணிகள் சார்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன அறிவிக்கை கடந்த ஜூலை 10- ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இத்தேர்வுக்கு தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல், உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கு 2,36,530 பேர் இணையவழியில் விண்ணப்பித்தனர்.
இதையடுத்து, முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் கடந்த அக். 12- ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், இந்தத் தேர்வு முடிவுகள், விடைக் குறிப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான https://trb.tn.gov.in வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மேலும் 1:1.25 விகிதாச்சாரப்படி, மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் பாட வாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அழைப்புக் கடிதத்தை... சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கான அழைப்புக் கடிதம், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கான வழிமுறைகள், ஆளறிச் சான்றிதழ் படிவம், பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடம், தேதி ஆகியவை அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும், அடுத்த கட்ட பணித் தேர்வுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.
சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் தொடர்பான கோரிக்கைகளை ற்ழ்க்ஷஞ்ழ்ண்ங்ஸ்ஹய்ஸ்ரீங்ள்ஃற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதல் மூன்று நாள்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. கோரிக்கை மனுக்கள் பிற வழியில் அனுப்பினால் பரிசீலிக்கப்படமாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.