

அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டம், பேரணி போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள், பொதுத் தேர்வெழுதி வெற்றி பெறுவது போன்று உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி, பேரணி உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதன்படி, தமிழக அரசு கடந்த வாரம் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வரைவு வழிகாட்டு நெறிமுறைகளின் நகல்களை அதிமுக, தவெக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகிய கட்சிகளுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தங்களது ஆலோசனைகளை அரசுக்கு வழங்கியிருப்பதாக அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விஜய நாராயணன், அரசு தாக்கல் செய்துள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள், மத ரீதியான வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அதுபோல், கூட்டத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை நிராகரித்தால், அதற்கான உரிய காரணங்களைத் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளைத் தெரிவித்தார்.
தவெக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பாலசுப்பிரமணியன், கூட்டங்கள் நடத்த தமிழகம் முழுவதும் உள்ள அனுமதிக்கப்பட்ட இடங்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அந்த இடங்களில் எத்தனை பேர் அமர முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.
அதற்கு அரசுத் தரப்பில், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளுக்குப் பிறகே வகுக்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் எல்லாம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி, பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பார்க்கும்போது, பொதுத் தேர்வெழுதி வெற்றி பெறுவது போன்று உள்ளது. சாலைப் பேரணிக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள ஒவ்வொரு பிரிவையும் எதிர்த்து தனித்தனியாக வழக்குத் தொடரும் வகையில் உள்ளன எனத் தெரிவித்தனர். பின்னர், வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.