

வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவாகி வடமேற்காக நகர்ந்து புதுச்சேரி கடலோரத்தை ஒட்டி நகர்ந்து செல்லும் டிட்வா புயல் காரணமாக, இரண்டு நாள்களுக்கு மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருககிறார்.
டிட்வா புயல் காணமாக கனமழையை எதிர்கொள்ள, அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் இன்று புதுச்சேரி வந்தடைந்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோனை நடத்தினர்.
புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாகவும், 312 தற்காலிக தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு தினங்களுக்கு பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியிர் குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் டிட்வா புயல் உருவானதை முன்னிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் புயல் கனமழையை எதிர்கொள்ளும் வகையில் அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று புதுச்சேரி வந்தடைந்தனர்.
இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடலோர பகுதி மற்றும் ஆற்றுப்பகுதி கிராமங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், டிட்வா புயல் காரணமாக புதுச்சேரிக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 20 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள அரக்கோணத்தில் இருந்து 2 கம்பெனிகளை சேர்ந்த 60 பேர் கொண்டு பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர். காரைக்காலுக்கு ஒரு குழு அனுப்பபட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது. 112, 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும், மேலும் 312 தற்காலிக தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வருவாய், காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறைகளை உள்ளடக்கிய 16 அவசரகால உதவி குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை என தெரிவித்தார்.
மேலும் கடந்த மழையில் எங்கெல்லாம் மழைநீர் தேங்கியதோ அப்பகுதிகளில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மூலம் 76 மோட்டார் பம்புகளும், 46 ஜேசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், எனவே மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை இருக்கும் என்பதால் மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும், பால், பிரட் ஆகியவைகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.