
கரூரில் விஜய் பிரசாரத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூரில் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் விஜய்யைப் பார்க்க மக்கள் கூடியபோது நேரிட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக பலியாகினர்.
41 பேர் பலியான இந்தச் சம்பவத்தில் ஆளும் திமுகவினர் மின்சாரத்தைத் துண்டித்து கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதாக தவெகவினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இந்த விவகாரம் குறித்து விடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “விடியோவிலேயே பார்க்கிறீர்கள்; மக்கள் கீழே இருந்து உதவி கேட்கின்றனர். அதன்பின்னர்தான் விஜய்யே தண்ணீர் பாட்டில்களை தூக்கிப் போடுகிறார். இந்த விடியோவை நாங்கள் எடுக்கவில்லை. நீங்கள் தான் வெளியிட்டுள்ளீர்கள்.
பொதுவாக அரசியல் கூட்டம் நடைபெறும் தலைவர்கள் சீட்டின் முன்பகுதியில் இருப்பார்கள் அல்லது வாகனத்தின் மேல் பகுதியில் இருப்பார்கள். ஆனால், இந்த விடியோவில் பார்க்கிறீர்கள். தவெக தலைவர் விஜய் வாகனத்தின் உள்ளேதான் இருந்தார்.
வாகனம் கடந்து செல்வதற்கு 500 மீட்டர் செல்லவே ஒரு மணி நேரம் ஆகியுள்ளது. வாகனத்தின் திரை மூடப்பட்டவிட்டது. விளக்கு அனைக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் கூட்ட நெரிசல் இருந்தும் குறிப்பிட்ட இடத்தில் இருந்துதான் பேசுவேன் என தவெகவினர் இருந்துள்ளனர். கிருக்காம்புளியூர் டவுண்டானா பகுதியில் இருந்து விஜய் பேசியிருந்தால் இந்தளவு கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது.
கீழே இருந்து தண்ணீர் பாட்டில் கேட்கும் போது கூட விஜய் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருந்தார்.
கரூரில் விஜய் பிரசாரத்தில் நேரிட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம். கரூர் துயர சம்பவம் மிக கொடுமையானது, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சம்பவம் நடந்த உடனே முதல்வர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார். கரூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி.
கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறோம். பாதிக்கப்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம். அனைத்து கட்சியினரும் வேறுபாடு இன்றி உதவி செய்தனர்.
லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் 7 ஆயிரம் பேர் மட்டுமே நிற்கமுடியும். அதேபோல உழவர் சந்தை பகுதியில் 5 ஆயிரம் பேர் வரை மட்டுமே நிற்க முடியும்.
தனியார் இடத்தை கேட்டு பெற்று திமுக முப்பெரும் விழா நடத்தினோம். திமுக முப்பெரும் விழாவில் கட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.