
கரூர் சம்பவம் குறித்து செந்தில் பாலாஜி பதட்டப்படுவது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில் இன்று ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சாராய அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார். தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது. கூட்டத்தில், விஜய் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது தவெக வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை அறியும் குழுவிடம் பெண்மணி ஒருவர், கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன?
கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.
யார் எங்கே சென்றார்கள், செல்லவில்லை என்று கேட்கும் தகுதி முதலில் திமுகவிற்கு இருக்கிறதா? கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயம், 66 உயிர்களைப் பலிகொண்ட போது அங்கு போகாத முதலமைச்சர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தி கூட்டணி உடன்பாடுகளுக்கு டெல்லி சென்ற முதலமைச்சர், தற்போது மட்டும் ஓடோடி வந்ததன் பின்னணியை மக்கள் அறிவார்கள்.
நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், முன்னாள் சாராய அமைச்சர் இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.