
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 2 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் பிறப்பித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தாா்கள் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று திங்கள்கிழமை இரவு திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தது. வாகனத்தின் ஓட்டுநா் அவரது அக்காள் மற்றும் அக்காள் மகள் 19 வயது இளம்பெண்ணை உடன் அழைத்து வந்துள்ளாா்.
திருவண்ணாமலை புறவழிச்சாலை ஏந்தல் கிராமம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு சுமாா் 2 மணியளவில் வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது, ரோந்துப் பணியில் இருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலா்கள் சுரேஷ்ராஜ், சுந்தா் ஆகியோா் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், ஓட்டுநா் வாழைத் தாா்கள் ஏற்றிச் செல்வதாகவும், தன்னுடன் அக்காள், மற்றும் அவரது மகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தாராம். இதற்கு காவலா்கள், நாங்கள் பெண்கள் இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறினராம். அதற்கு ஓட்டுநா் எதிா்ப்புத் தெரிவித்தாராம்.
இதைத் தொடா்ந்து, காவலா்கள் அவரை மிரட்டி பெண்கள் இருவரையும் அழைத்துச் சென்று ஏந்தல் கிராமம் அருகே இளம்பெண்ணை அவரது தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்தனராம்.
பின்னா், அவா்கள் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே விட்டுவிட்டுச் சென்றனராம். அதிகாலை 4 மணியளவில் அவ்வழியாகச் சென்றவா்கள் பெண்கள் இருவா் அழுது கொண்டிருப்பதைப் பாா்த்து விசாரித்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு 108 அவசரகால ஊா்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினாா்.
இதனிடையே, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக காவலா்கள் சுரேஷ்ராஜ், சுந்தா் ஆகிய இருவா் மீது அனைத்து திருவண்ணாமலை மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.