
இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பால், திருப்பூரில் பின்னலாடைத் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவிகித வரியால், திருப்பூரில் பல சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. அமெரிக்காவுக்குச் செல்லும் ஏற்றுமதியில் 30 முதல் 35 சதவிகிதம் வரை திருப்பூர் பங்களிக்கும் நிலையில், அமெரிக்காவின் வரியால், திருப்பூர் பின்னலாடைத் தொழில் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
2024 - 25 நிதியாண்டில், திருப்பூர் பின்னலாடைத் தொழில் ரூ. 40,000 கோடி மதிப்பு பொருள்களை ஏற்றுமதி செய்தது. மேலும் நடப்பு நிதியாண்டில் 25 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது திருப்பூர் ஒரு பெரிய மந்தநிலையைச் சந்தித்து வருகிறது.
திருப்பூரின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கானது, அமெரிக்காவுக்குச் செல்லும் நிலையில், அமெரிக்காவின் ஆர்டர் குறைந்து, பல சிறு, குறு நிறுவனங்கள் கட்டாய ஆள்குறைப்பு நடவடிக்கைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் தொடர்ச்சியாக ஆர்டர் கொடுப்பதால், திருப்பூர் நிறுவனங்கள் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கும். மேலும், அமெரிக்கா மதிப்புகூட்டப்பட்ட பொருள்களைக் (எம்பிராய்டரி, பிரிண்டிங்) கேட்பதில்லை. சாதாரண ஆடைகளைத்தான் அவர்கள் வாங்குகிறார்கள்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தென் ஆப்பிரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா போன்ற மாற்றுச் சந்தைகளை ஆராய்ந்து வந்தாலும், ஒரு வலுவான இருப்பை நிலைநிறுத்த குறைந்தது 2 ஆண்டுகள் தேவைப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.