
வன்முறையைத் தூண்டும் விதமாக சர்ச்சைப் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது கடுமையான கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்து பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது போல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா? சின்ன வார்த்தை பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, தவறான திட்டமிடல் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தவெக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சியைப் போல தமிழகத்தில் புரட்சி வெடிக்க வேண்டும் என வன்முறையைத் தூண்டும் விதமாக சர்ச்சைப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி கடும் எதிர்ப்புகள் வெளியான நிலையில் சில நிமிடங்களிலேயே, ஆதவ் அர்ஜுனா அதனை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.