கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் தவெகவைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் கோரிய முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்.27 ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயண பிரசாரக் கூட்டத்தில் அதிகப்படியான மக்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.
இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் மதியழகன் மற்றும் மற்றொரு நிர்வாகி மாசி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனிடையே முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, "கரூர் பலி திட்டமிட்ட செயல் அல்ல, அது ஒரு விபத்து, தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை" என அவர்களது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை நடத்திய ஆனந்த் & நிர்மல் குமாருக்கு பொறுப்பு இல்லையா? என்று நீதிபதி கேட்க,
"நிகழ்ச்சியை நடத்தியது மாவட்டச் செயலாளர் மதியழகன். அவர் கைது செய்யப்பட்டுவிட்டார், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் பொறுப்பு அல்ல. இவர்களுக்கு முன் ஜாமீன் கொடுங்கள்" என்று தவெக வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மேலும் "இந்த இருவர் மட்டும் மக்களை கட்டுப்படுத்த முடியாது. உரிய பாதுகாப்பை வழங்கவே காவல்துறையிடம் பாதுகாப்பு கோருகிறோம். மற்ற மாவட்டங்களைப்போல கரூரிலும் கூட்டம் வருமென காவல்துறை கணித்திருக்க வேண்டும். கூட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியுள்ளது.
பாதுகாப்பை பொருத்தவரை அரசுக்குதான் முழு பொறுப்பு இருக்கிறது" என்று கூறினார்.
அரசுத்தரப்பில், "தலைமறைவாவது ஏற்கத்தக்கது அல்ல. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.
விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டது.
வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.