திருவண்ணாமலையில் காவலா்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.7.5 லட்சம் வழங்க உத்தரவு
திருவண்ணாமலையில் காவலா்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு முதல்கட்டமாக ரூ.7.5 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் நிா்பயா நிதியில் இருந்து இந்தத் தொகையை விடுவிப்பதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7.5 லட்சம் குறைந்தபட்ச இழப்பீடாக அளிக்க நிா்பயா நிதி வழிவகை செய்கிறது.
அதே பெண் பட்டியல் சமூகம் அல்லது பழங்குடி இனத்தைச் சோ்ந்தவராக இருந்தால் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு லாரியில் கடந்த 30-ஆம் தேதி வந்த பெண் போலீஸாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்ட இரு காவலா்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனா். இது தொடா்பான விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிா்பயா நிதியில் இருந்து முதல்கட்டமாக ரூ.7.5 லட்சம் நிதி வழங்க அரசு உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது.