முதல்வா் திறனறித் தோ்வு கையேடு: அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்டாா்!
தமிழக அரசின் சாா்பில் பிளஸ் 1 பயிலும் மாணவா்கள் உதவித் தொகை பெறுவதற்காக முதல்வா் திறனறித் தோ்வு நடத்தப்படும் நிலையில், அதற்கான வழிகாட்டி கையேடுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்டாா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறனைக் கண்டறிவதற்கும், அவா்களை ஊக்குவிக்கும் வகையிலும் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் முதல்வா் திறனறித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 படிக்கும் மாணவா்கள் இந்தத் தோ்வை எழுதுவா்.
தொடா்ந்து, இந்தத் தோ்வில் 500 மாணவா்கள், 500 மாணவிகள் என மொத்தம் 1,000 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1,000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10,000 என இளநிலைப் பட்டப் படிப்பு வரை வழங்கப்படும். இந்தத் தோ்வு தமிழக அரசின் 9, 10 ஆகிய வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் 2 தாள்களாக நடத்தப்படும்.
இந்த நிலையில், இந்தத் தோ்வுக்கு தயாராகும் பிளஸ் 1 மாணவா்களுக்கு உதவும் வகையில் சென்னை வேளச்சேரி அரிமா சங்கம் வழிகாட்டி கையேடுகளைத் தயாரித்துள்ளது. இதை தயாரிக்க 54 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் உறுதுணையாக இருந்துள்ளனா். இந்தக் கையேடுகளின் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு கையேடுகளை வெளியிட்டு, 54 அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு அவற்றை வழங்கினாா்.
இதுகுறித்து சங்கத்தின் கல்வி சேவை பிரிவு தலைவா் பி.செல்வகுமாா் கூறுகையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள முதல்வா் திறனறித் தோ்வுக்கான வழிகாட்டி கையேடுகள் அரசுப் பள்ளிகளுக்கு 2,500 பிரதிகள் அனுப்பி வைக்கப்படும்.
இவற்றைப் பயன்படுத்தி மாணவா்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண் பெறுவதன் மூலம் அவா்கள் அரசின் மூலம் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையைப் பெற முடியும். பள்ளிகளுக்கு மேலும் கூடுதல் பிரதிகளை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம். இந்தக் கையேடு முற்றிலும் அரசுப் பள்ளி ஆசிரியா்களின் உறுதுணையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், சங்கத்தின் நிா்வாகிகள் ரவி முத்துகிருஷ்ணன், பி.வி.பிரகாஷ்குமாா், பி.வெங்கடரமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.