
செங்கல்பட்டு: திராவிட மாடல் பெயர்க்காரணம் எதற்காக வந்தது என்பதை முதல்வர் மு. க. ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
செங்கல்பட்டு அருகேயுள்ள மறைமலை நகரில் சனிக்கிழமை(அக். 4) மாலை திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
இவ்விழாவில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டுக்கான நினைவு கல்வெட்டை திறந்து வைத்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது:
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் மானமிகு சுயமரியாதைக்காரன் என்ற உணர்வுடன் பங்கெடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்ற கழகம்(திமுக).
பெரியாரின் சிந்தனைகள் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வரை பேசப்படுகிறது. இது பெரியார் கொள்கைக்கும், திராவிட சிந்தனைக்கும் கிடைத்த வெற்றி!
திருச்சியில் உருவாகி வரும் பெரியார் உலகம் பணிகளுக்காக திமுக எம்.பி, எம்.எல்.ஏ.,க்களின் ஒரு மாத ஊதியத் தொகை வழங்கப்படும். பெரியார் உலகமயமாக வேண்டும்; உலகம் பெரியார்மயமாக வேண்டும்.
இந்த 100 ஆண்டுகளில் நாம் மாற்றத்திற்கான விதைகளை மட்டும்தான் விதைத்திருக்கிறோம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கி உள்ள கட்டமைப்புகளை உங்களால் உடைக்க முடியவில்லை. அவர்களுக்கு எரியட்டும் என்றுதான் திரும்பத்திரும்ப திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என்னுடைய செயல்களால் மட்டும் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். எதுவுமே மாறக் கூடாது என சதித்திட்டம் தீட்டுபவர்களின் எண்ணத்தை மக்கள் பார்க்க வேண்டும்.
சிலர் திமுகவை பிடிக்காது என்பார்கள்; இடஒதுக்கீடு, சமத்துவம், சமூக நீதி பிடிக்காதது என்பதன் பொருள்தான் அது. பிற்போக்குதனத்தை தூக்கிப் பிடிப்பதற்கான சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. பிற்போக்குத்தனத்தை புகுத்த நினைப்பதை தடுக்கும் அரண்தான் திராவிட மாடல். தமிழினம் தன்னை காத்துக் கொள்ளக் கூடிய சமுதாய தேர்தல்தான் 2026-ஆம் ஆண்டு தேர்தல்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.