குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்ட விரோத காவலாகக் கருதக் கூடாது: ஆள்கொணா்வு வழக்கில் உயா்நீதிமன்றம் உத்தரவு
தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகளை சட்டவிரோத காவலில் இருப்பதாக கூற முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், குழந்தைகளை ஒப்படைக்கக் கோரி தாய் தொடா்ந்த ஆள்கொணா்வு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணப்ரியா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவில், எனது கணவா் வைத்தியநாதனும், நானும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா். எனது கணவா் குழந்தைகளை வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டாா்.
என்னுடைய குழந்தைகள் தற்போது எங்கு இருக்கிறாா்கள் என்பது தெரியவில்லை. குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தன்னிடம் ஒப்படைக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத காவலில் இருந்தால் மட்டுமே ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்ய முடியும். இந்த வழக்கில் குழந்தைகள் தந்தையிடம் இருப்பதை சட்டவிரோத காவல் என்று கூறமுடியாது எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
மேலும், இது தொடா்பாக மனுதாரா் உரிய நிவாரணம் கோரி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளனா்.