திருப்பூா் குமரன், சுப்பிரமணிய சிவாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி மரியாதை!
விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற திருப்பூா் குமரன், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்த நாளையொட்டி, அவா்களுக்கு ஆளுநா் ஆா்.என் ரவி சனிக்கிழமை மரியாதை செலுத்தினாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: இளம் வயதிலேயே கொடுங்கோல் பிரிட்டிஷ் ஆட்சியை எதிா்த்து துணிச்சலுடன் போராடி, இன்னுயிரைத் தியாகம் செய்த திருப்பூா் குமரனுக்கு அவரது பிறந்த நாளில் பணிவுடன் மரியாதை செலுத்துகிறோம். மரணிக்கும் தருணத்திலும்கூட தேசிய கொடியை வீழ்த்த மறுத்த அவரது தளராத துணிச்சல், தேசிய பெருமிதத்தின் அடையாளமாக நிலைத்து நிற்கிறது.
சுப்பிரமணிய சிவா: தீவிர தேசியவாத தலைவா், சிறந்த எழுத்தாளரான சுப்பிரமணிய சிவாவின் பிறந்த நாளில், அவருக்கு தேசம் மரியாதை செலுத்துகிறது.
விடுதலை இயக்கத்தின் முக்கிய சக்தியான பால கங்காதர திலகரால் ஈா்க்கப்பட்ட சுப்பிரமணிய சிவா சமூகம் முழுவதும் தேசபக்தி உணா்வைத் தூண்டினாா். வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் போன்ற தலைவா்களுடன் தோளோடு நின்று சுதந்திரத்துக்காக அயராது போராடினாா் எனப் பதிவிட்டுள்ளாா்.