முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்கோப்புப் படம்

கரூா் சம்பவம்: முழு உண்மையும் சிறப்புக் குழு விசாரணையில் வெளிவரும்! முதல்வா் ஸ்டாலின் உறுதி

கரூா் துயர சம்பவம் தொடா்பான சிறப்பு விசாரணைக் குழு மூலம் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
Published on

கரூா் துயர சம்பவம் தொடா்பான சிறப்பு விசாரணைக் குழு மூலம் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: கரூா் துயரம் குறித்து உயா்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாகக் கவனத்தில்கொண்டு செயலாற்றி வருகிறது. தம் அன்புக்குரியவா்களை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன். உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையைத் தொடங்கும்.

இதன்மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதல்வராக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். அனைத்து நிலைகளிலும் பொறுப்புகள் உறுதி செய்யப்படும்.

பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிா்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசாா் வல்லுநா்கள், அரசியல் கட்சியினா், செயற்பாட்டாளா்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான- நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைப்போம்.

தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக அது அமையும். துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவா் குற்றம்சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீா்வை நோக்கிப் பயணிப்போம்.

இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வோா் உயிரும் விலை மதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படியொரு பெருந்துயரம் நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு

கரூா் சம்பவம் தொடா்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் போலீஸாா் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

கரூரில் செப். 27-ஆம்தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் குறித்து கரூா் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் விசாரணை மேற்கொண்டு வந்தாா். இதையடுத்து, அவா் திடீரென்று மாற்றப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரேம் ஆனந்த் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், கரூா் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கா்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இந்தக் குழுவில் கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.ஜோஷ் தங்கையாவையும் இணைத்து, வழக்கு ஆவணங்களை உடனே விசாரணைக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, கரூா் சம்பவம் தொடா்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் போலீஸாா் சனிக்கிழமை ஒப்படைத்ததாகவும், இந்தக் குழுவினா் விரைவில் விசாரணை நடத்த கரூா் வர உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com