
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப். 27ஆம் தேதி தவெக தலைவரும் நடிகருமான விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின்போது 41 பேர் பலியான சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணை நடத்தியது.
மேலும், கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சனிக்கிழமை காலை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டது.
கரூரில் கடந்த 27ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 7 பேரும், பறையர் சமூகத்தைச் சேர்ந்த 6 பேரும் என தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவத்தில் அதிகளவில் தாழ்த்தப்பட்டோர் உயிரிழந்ததால் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு கரூர் வந்தடைந்தனர்.
இதையடுத்து சனிக்கிழமை காலை 10 மணியளவில் அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த இடமான வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி மக்களிடம் சம்பவத்தை நேரில் கண்டவை குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவரிடம் நலம் விசாரித்து அவரிடம் சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் உயிரிழந்த கிராமமான ஏமூர் புதூர் கிராமத்திற்கு சென்ற அவர்கள் அங்கு நெரிசலில் சிக்கி உயிரிழந்த அருக்காணியின் குடும்பத்தினர் உள்ளிட்ட 5 பேரின் குடும்பத்தினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை குரு விஷ்ணுவின் வீட்டிற்கு சென்ற தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான தாழ்த்தப்பட்ட ஆணையர் குழுவினர், பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். குழந்தையின் குடும்பத்தினர் சம்பவம் நடந்தது எப்படி என்பது பற்றியும் கூறினர்.
குரு விஷ்ணுவின் தாய், வாய், காது மாற்றுத்திறனாளி என்பதால், அவரது குடும்பத்தினர், சம்பவம் பற்றி விவரித்தனர். வேலுச்சாமிபுரத்தில், கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு மிக அருகில் இவர்கள் வீடு இருந்ததாலும், விஜய்யைப் பார்த்தால் சிறுவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதாலும் சிறுவனை அவரது அத்தை அழைத்துச் சென்றபோதுதான் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதாக அவரது குடும்பத்தினர் விவரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.