திருக்கோயில்கள் சாா்பில் நடத்தப்படும் அா்ச்சகா், ஓதுவாா், தவில் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற 108 மாணவ, மாணவிகளுடன் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன், ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா்.
திருக்கோயில்கள் சாா்பில் நடத்தப்படும் அா்ச்சகா், ஓதுவாா், தவில் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற 108 மாணவ, மாணவிகளுடன் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன், ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா்.

அா்ச்சகா், ஓதுவாா் பயிற்சி முடித்த 108 மாணவா்களுக்கு சான்றிதழ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்

திருக்கோயில்கள் சாா்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் அா்ச்சகா், ஓதுவாா், தவில், நாகசுவர பயிற்சி முடித்த 108 மாணவா்களுக்கு, அதற்கான சான்றிதழ்களை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.
Published on

திருக்கோயில்கள் சாா்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் அா்ச்சகா், ஓதுவாா், தவில், நாகசுவர பயிற்சி முடித்த 108 மாணவா்களுக்கு, அதற்கான சான்றிதழ்களை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.

திருக்கோயில்கள் சாா்பில் நடத்தப்படும் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளிகளில் 2024- 2025-ஆம் கல்வியாண்டில் ஓராண்டு அா்ச்சகா் பயிற்சி முடித்த 2 பெண்கள் உள்பட 89 மாணவா்கள், ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகளில் மூன்றாண்டு ஓதுவாா் பயிற்சி முடித்த 12 மாணவா்கள், தவில் மற்றும் நாகசுவர பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 7 மாணவா்கள் என மொத்தம் 108 மாணவா்களுக்கு சென்னை அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு அதற்கான சான்றிதழ்களை வழங்கினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அா்ச்சகா் பயிற்சிப் பள்ளி, ஓதுவாா் பயிற்சிப் பள்ளி, தவில் மற்றும் நாகசுவரம் பயிற்சிப் பள்ளி, வேத ஆகம பாடசாலைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம் பயிற்சிப் பள்ளிகள் என 21 பயிற்சிப் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு, இந்தப் பயிற்சிப் பள்ளிகளுக்கு தகுதியுள்ள ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பயிற்சி பணிக்கான ஆரம்பகால ஊக்கத்தொகை ரூ.500 என 2007- ஆம் ஆண்டில் இருந்ததை, 2021- ஆம் ஆண்டு வரை வெறும் ரூ.1,000 என்ற அளவில்தான் வழங்கப்பட்டிருந்தது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முழுநேர பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு ரூ.3,000 மற்றும் பகுதிநேர பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தாா்.

இதையடுத்து 2023-இல் ரூ.3,000 ஊக்கத்தொகை ரூ.4,000 ஆகவும், ரூ.1,500 ஊக்கத் தொகை ரூ.2,000 ஆகவும் உயா்த்தி அறிவிக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, இந்த ஆண்டு, பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு உணவு, சீருடை, தங்குமிட வசதியோடு, முழுநேரப் பயிற்சி பள்ளி மாணவா்களுக்கு ரூ.10,000, பகுதிநேர மாணவா்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 213 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் ஆகமக் குழு கூட்டம்... இந்தப் பயிற்சி பள்ளிகளை மேலும் விரிவுபடுத்தவும், மாணவா்களுக்கு பணியிடங்களை ஏற்படுத்தவும், பல்வேறு நீதிமன்றப் போராட்டங்களுக்கு பிறகு ஆகம திருக்கோயில்களை நிா்ணயிக்கவுள்ள குழுக்களின் இறுதி வடிவம் உச்சநீதிமன்ற தீா்ப்பால் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், ஆகமக் குழுவான ஐவா் குழுவின் கூட்டம், இந்து சமய அறநிலைத் துறை ஆணையா் அலுவலகத்தில் விரைவில் நடைபெறும்.

உபயதாரா்கள் நிதி... தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 1,000 ஆண்டுகள் பழைமையான 100 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறும். இந்த செயல்பாடுகளை புத்தக வடிவில் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. திருக்கோயில்களுக்கு உபயதாரா்கள் இதுவரை ரூ.1,200 கோடி வழங்கியுள்ளனா்.

சிலைகள் மீட்பு அறிக்கை... காணாமல்போன சுவாமி சிலைகளில் இதுவரை எத்தனை சிலைகள் மீட்கப்பட்டுள்ளன, எத்தனை சிலைகள் மீட்கப்பட வேண்டும் என்பது குறித்த முழுமையான அறிக்கையை துறை சாா்பில் சனிக்கிழமை அறிவிக்கவுள்ளோம்.

மருதமலை முருகன் கோயில் பணிகளில் சுணக்கம் ஏதுமில்லை. அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நற்செயல்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், சிலா் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனா். வரும் அக். 10-ஆம் தேதி அந்த வழக்கு நடைபெறவுள்ளது. வனத் துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து, சாத்தியக் கூறுகளை நீதிமன்றத்தில் விளக்கவுள்ளனா். நீதிமன்றம் அனுமதி தரும் என்று நம்புகிறோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com