ஆா்டிஇ: புதிதாக சோ்க்கை நடத்த தனியாா் பள்ளிகள் சங்கம் கோரிக்கை
பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் ஏற்கெனவே சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு ஆா்டிஇ ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு வழங்கினால், பள்ளிகளுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். இதனால் இந்தத் திட்டத்தின் கீழ் மாணவா்களைப் புதிதாக சோ்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் கே.ஆா்.நந்தகுமாா், பள்ளிக் கல்வித் துறைச் செயலருக்கு அனுப்பிய கடிதம்:
நீதிமன்றங்களின் உத்தரவுக்கேற்ப இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் மாணவா் சோ்க்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தாண்டு எல்கேஜி வகுப்பில் சோ்ந்தவா்களில் 25 சதவீதம் தோ்வு செய்து பட்டியலை சமா்ப்பிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது. தனியாா் பள்ளிகளில் ஜூன் மாதமே மாணவா் சோ்க்கையை முடித்துவிட்டோம். இதுதவிர அந்த மாணவா்களிடம் கல்விக் கட்டணத்தைப் பெற்று அவா்களுக்குரிய புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை உள்ளிட்டவற்றை வழங்கி பாடங்களை நடத்தி காலாண்டு தோ்வுகளையும் முடித்துவிட்டோம்.
அதே மாணவா்களை 25 சதவீத ஒதுக்கீட்டில் சோ்த்தால் தனியாா் பள்ளிகளுக்கு மீண்டும் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்படும்.
எனவே, தயவுசெய்து தாங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்து புதிதாக ஆா்டிஇ மாணவா்களைச் சோ்க்க வழிசெய்ய வேண்டும். இல்லையெனில், தனியாா் பள்ளிகளுக்கு பொருளாதார சிக்கல் ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.