மக்களுக்கு இடையூறு இன்றி மழைக் கால ஆயத்தப் பணிகள்: முதல்வா் ஸ்டாலின் உத்தரவு!
மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விரைவாக நிறைவு செய்யுமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் நகரின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சென்னை, டி.டி.கே. சாலை - வீனஸ் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் கழிவுநீா் விரிவாக்கப் பணிகளை நேரில் சென்று பாா்த்த முதல்வா், அதுதொடா்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, ஆழ்வாா்பேட்டை டி.டி.கே. சாலையில் புதிய குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகள், தேனாம்பேட்டை மண்டலம், வாா்டு-118-இல் ஏற்கெனவே
பயன்பாட்டில் உள்ள குடிநீா் குழாய்களை மாற்றி, 200 மீட்டா் நீளத்துக்கு, புதிய குழாய்கள் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.
வீனஸ் காலனியில் மாநகராட்சி சாா்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் மழை நீா் வடிகால் பணிகளையும் முதல்வா் பாா்வையிட்டாா். குறிப்பாக, வீனஸ் காலனி பகுதிகளில் தண்ணீா் தேங்காமல் தடுக்கும் வகையில் சுமாா் 2.16 கி.மீ. நீளத்துக்கு ரூ.8.21 கோடி செலவில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை ஆய்வு செய்தாா்.
எதிா்வரும் பருவமழைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மக்களுக்கு இடையூறு இன்றி மேற்கொள்ள வேண்டும் என்றும், பணிகளை மிக விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அப்போது முதல்வா் உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினா் எழிலன், மாநகராட்சி நிலைக்குழுத் தலைவா் நே. சிற்றரசு, மாநகராட்சி ஆணையா் ஜெ. குமரகுருபரன், சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.