தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின்.
Published on
Updated on
2 min read

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

”இந்தியத் திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்களின் உழைப்பின் பலனாக தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாது. அந்நிய முதலீடுகளையும் ஈர்த்துவருகிறது.

2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 9.69 சதவீதம் என்பது நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக உயர்ந்ததாகும் என்பதோடு கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மிக உயர்ந்த வளர்ச்சியுமாகும். இவ்வளர்ச்சியை எட்டுவதில் அரசுத் துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவர்கள் அனைவரின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் தூண்களாக திகழ்கிறார்கள். மேலும், நாட்டில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகமும் திகழ்கிறது பெண்கள் அதிகாரமடையவும். சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடையவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டமான “விடியல் பயணம்" திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன் எளிதில் ஏற்கக்கூடிய குறைந்த வாடகையில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் சக்தியே ஒரு நாட்டை உயர்த்தும் என்பதையும், உற்பத்தியைப் பெருக்கி பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் இவர்களின் பங்கு முக்கியமானது என்பதையும் கருத்தில் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015 படி மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ. 21,000 எனவும், இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ. 7,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி உச்சவரம்பை தளர்த்தி அனைத்து சி மற்றும் டி பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 2024-25 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை கீழ்வருமாறு வழங்கப்படும்

1. லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

2. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்

3. ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

4. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.

5. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.

6. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ. 3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால், மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 8,400 மற்றும் அதிகபட்சம் ரூ. 16,800 வரை பெறுவர்.

மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ. 376.01 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இது தவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.

அரசின் இந்த நடவடிக்கை. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும். எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

20% Diwali bonus for Tamil Nadu government employees

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com