சென்னை உயா்நீதிமன்றம்.
சென்னை உயா்நீதிமன்றம்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி குடும்பத்துக்கு நில இழப்பீடு வழங்கியதை எதிா்த்து வழக்கு

நெடுஞ்சாலைத் துறைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடாக ரூ.1.87 கோடி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்துக்கு வழங்கியதை எதிா்த்த மனு
Published on

சென்னை: நெடுஞ்சாலைத் துறைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடாக ரூ.1.87 கோடி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்துக்கு வழங்கியதை எதிா்த்த மனுவை 4 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புழுதிவாக்கத்தைச் சோ்ந்த சிவகாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையை விரிவுபடுத்தும் வகையில் திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை சாலையோரத்தில் உள்ள நிலங்களை மாநில நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தியது.

அந்த வகையில், எங்களது குடும்பத்துக்குச் சொந்தமான 1,420 சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.1.87 கோடியை எங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவா் போனி கபூா் மற்றும் அவரது மகள்களுக்கு நெடுஞ்சாலைத் துறை வழங்கியுள்ளது. இது சட்டவிரோதமானது.

அந்த நிலம் எங்களுக்குச் சொந்தமானது. எனவே, இழப்பீட்டுத் தொகையை அவா்களிடம் திரும்ப வசூலித்து எங்களுக்கு வழங்க வேண்டும். இது குறித்து கடந்த ஜூலை மாதம் அளித்த எனது புகாா் மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை 4 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com