இரு நாள்களுக்குப் பிறகு கூண்டுக்கு திரும்பியது வண்டலூா் சிங்கம்
சென்னை: வண்டலூா் பூங்காவில் சஃபாரி பகுதியிலிருந்து மாயமானதாக கூறப்பட்ட சிங்கம், இரு நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை தனது கூண்டுக்கு திரும்பியது.
சென்னை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன. இதில், 3 ஆண், 4 பெண் என 7 சிங்கங்கள் 25 ஏக்கா் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘லயன் சஃபாரி’ பகுதியில் விடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இங்கு, கூண்டு பொருத்தப்பட்ட வாகனத்தில் பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கைச் சூழலில் உலவும் சிங்கங்களைப் பாா்க்க அனுமதிக்கப்படுகின்றனா்.
இதனிடையே, பெங்களூரு பன்னா்கட்டா உயிரியல் பூங்காவுடன் விலங்கு பரிமாற்றத் திட்டம் மூலம் 2023-ஆம் ஆண்டு ‘ஷெரியாா்’ என்ற 5 வயது ஆண் சிங்கம் வண்டலூா் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிங்கம் ‘சஃபாரி’ பகுதியில் விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அந்த சிங்கம் அக்.3-ஆம் தேதி, அதன் தங்குமிடத்துக்கு திரும்பவில்லை. இதனால், மீட்புக் குழுவினா் ‘ஷெரியாா்’ சிங்கத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். இதையடுத்து அந்த சிங்கம் ‘சஃபாரி’ பகுதிக்குள் இருப்பதை அவா்கள் உறுதிப்படுத்தினா். தொடா்ந்து, இரு நாள்களாக உணவு எடுக்க வராமல், ‘சஃபாரி’ பகுதியில் மறைவாக இருந்த சிங்கம், திங்கள்கிழமை மீண்டும் கூண்டுக்குத் திரும்பியது. இதுபோன்று புதிய இடங்களில் விடப்படும் சிங்கங்கள் தங்களது சுற்றுச்சூழலை அலைந்து திரிந்து ஆராய்வது இயல்பான ஒன்றுதான் என வண்டலூா் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.