கரூர் நெரிசல் பலி சம்பவம் குறித்து வேலுச்சாமிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதுமே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கரூருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன், கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"நீதிமன்றத்தில் விசாரணையில் நடந்துகொண்டிருக்கிறது. இதைப்பற்றி அதிகம் பேச கூடாது. ஏற்கெனவே நிறைய பேசிவிட்டார்கள். நாங்கள் இந்த மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும் ஆறுதல் சொல்வதற்கும் வந்திருக்கிறோம்.
இந்த மக்கள் நிறைய கஷ்டப்பட்டுவிட்டார்கள். அவர்களை விட்டுவிடுங்கள். இது யாரையும் பாராட்ட வேண்டிய நேரமில்லை. ஆனால் அந்த பாலம் இருக்கும் பகுதியில் அனுமதி கொடுக்காதது சரியானதுதான். இல்லையெனில் இதைவிட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்.
இனிமேல் இதுபோன்ற ஒரு விஷயம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர், ஒரு பண்புள்ள அரசியல்வாதி எப்படி செயல்பட வேண்டுமோ ஒரு தலைமை எப்படி செயல்பட வேண்டுமோ அதைக் காட்டியிருக்கிறார்கள். அதற்கு நன்றி.
கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய விடியோக்கள் வருகின்றன. எது உண்மை என ஆராய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. காவல்துறை தனது கடமையைச் செய்திருக்கிறார்கள். அவர்களை குறை சொல்ல வேண்டாம்.
விஜய்க்காக அறிவுரையை நீதிமன்றம் சொல்லும்" என்றார்.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.