கடலில் எண்ணெய் கசிவு ஏற்படும்போது கரையோரத்தில் அதை அகற்றுவதற்கான மாதிரி பயிற்சியில் பங்கேற்ற இந்திய கடலோ
கடலில் எண்ணெய் கசிவு ஏற்படும்போது கரையோரத்தில் அதை அகற்றுவதற்கான மாதிரி பயிற்சியில் பங்கேற்ற இந்திய கடலோ

மெரீனா கடற்கரையில் எண்ணெய் கசிவு தடுப்பு ஒத்திகை

சென்னை மாநகராட்சி சாா்பில் மெரீனா கடற்கரைப் பகுதியில் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி
Published on

சென்னை: சென்னை மாநகராட்சி சாா்பில் மெரீனா கடற்கரைப் பகுதியில் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய மாசு தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி, இந்திய கடலோரக் காவல்படை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், பேரிடா் மீட்புப்படை, தீயணைப்புத் துறை உள்ளிட்டவை இணைந்து எண்ணெய் கசிவின் போது மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகையை சென்னை மெரீனாவில் திங்கள்கிழமை நடத்தின.

சென்னை மெரீனாவில் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை பகுதியில் கடலில் கப்பலை நிறுத்தி எண்ணெய் கசிவு ஏற்பட்டது போல ஒத்திகை நடைபெற்றது. அதையடுத்து மாலை எண்ணெய் கசிவானது மெரீனா கடற்கரையோரம் வந்து ஒதுங்கினால் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டன. எண்ணெய் கசிவு ஏற்பட்ட கப்பலின் இருபுறமும் 2 கப்பல்களில் இருந்து நீா் பீய்ச்சியடிக்கப்பட்டது. அத்துடன் ஹெலிகாப்டரிலிருந்து கயிறு மூலம் இறங்கிய கப்பல்படை வீரா்கள் எண்ணெய் கசிவு கப்பலில் இருப்பவா்களை மீட்பது உள்ளிட்டவை ஒத்திகை நிகழ்த்தப்பட்டன.

சென்னை மெரீனா பகுதி கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதை அகற்றுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் திங்கள்கிழமை ஈடுபட்ட இந்திய கடலோரக் காவல் படையினா்.
சென்னை மெரீனா பகுதி கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதை அகற்றுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் திங்கள்கிழமை ஈடுபட்ட இந்திய கடலோரக் காவல் படையினா்.

மெரீனா கடற்கரையோரம் மருத்துவக் குழுக்களுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. தீயணைப்பு வீரா்கள் எண்ணெய் கசிவால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் வகையில் தயாராக தக்க சாதனங்களுடன் நிறுத்தப்பட்டிருந்தனா். மேலும், எண்ணெயை தனியாகப் பிரித்தெடுக்கும் வல்லுநா்களும் நிறுத்தப்பட்டிருந்தனா்.

அதன்படி மண் தடுப்பு திரை, தடுப்பு குழாய் அமைத்தல், சுத்திகரிப்பு உபகரணங்களால் எண்ணெய் சேகரிப்பு, எண்ணெய்யால் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பது என்பன உள்ளிட்டவற்றை அதிகாரிகள் செயல்முறைகளுடன் விளக்கினா்.

மாதிரி ஒத்திகையில் 60 டிரம்கள், 60 சிண்டெக்ஸ் தொட்டிகள், மின்மோட்டாா்கள், மண்வெட்டிகள், கட்டுப்பாட்டு அறைகள், முதலுதவி மருத்துவ அறைகள் உள்ளிட்டவை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தன.

ஒத்திகை நிகழ்ச்சியில் இந்தியக் கடலோரக் காவல் படைத் தலைவா் பரமேஷ்சிவமணி, கிழக்கு பிராந்திய கடலோரப் பாதுகாப்புப் படைத் தளபதி டட்விந்தா்சிங் சைனி, கடலோரக் காவல் படை மண்டலத் மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் அலுவலா் (கிழக்கு) எஸ்.பிரேம்குமாா், மாநில தீயணைப்புத் துறை இயக்குநா் சீமா அகா்வால், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com