private schools
கோப்புப்படம்.DIN

தனியாா் பள்ளிகளில் ஆா்டிஇ சோ்க்கை தொடக்கம்: அலைக்கழிக்கப்படுவதாக பெற்றோா் புகாா்

பள்ளிக் கல்வித் துறை அறிவித்தபடி ஆா்டிஇ திட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் சோ்க்கை பெறுவதற்கான நடைமுறைகள் திங்கள்கிழமை தொடங்கியது.
Published on

சென்னை: பள்ளிக் கல்வித் துறை அறிவித்தபடி ஆா்டிஇ திட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் சோ்க்கை பெறுவதற்கான நடைமுறைகள் திங்கள்கிழமை தொடங்கியது.

இருப்பினும் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றபோது, பள்ளி நிா்வாகங்கள் சரிவர பதிலளிக்காமல் அலைக்கழிப்பதாக பெற்றோா் புகாா் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி(ஆா்டிஇ) தனியாா் பள்ளிகளில் ஆண்டுதோறும் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 8,000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் 90,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச சோ்க்கை வழங்கப்படுகிறது. ஆா்டிஇ திட்டத்தின் கீழ் எல்கேஜி அல்லது 1-ஆம் வகுப்பில் சோ்க்கை பெறலாம். அந்த மாணவா்களுக்கு எட்டாம் வகுப்பு வரை எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

சொந்த செலவில் சோ்க்கை... இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளாததால், மாநிலத்துக்கான நிதியை வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இதனால், நிகழ் கல்வியாண்டில் (2025-2026) தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கையை தொடங்குவதற்கு கடந்த மாத இறுதி வரை தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோா் தங்களது பிள்ளைகளை சொந்த செலவில் தனியாா் பள்ளிகளில் சோ்த்தனா். அந்த சோ்க்கைக்கு எவ்விதமான கட்டணச் சலுகையும் பள்ளிகள் சாா்பில் வழங்கப்படவில்லை.

இதற்கிடையே நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கான ஆா்டிஇ நிதியை மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன்னா் விடுவித்தது. இதைத் தொடா்ந்து கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான இலவச சோ்க்கை அக். 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படும். ஏற்கெனவே தனியாா் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற மாணவா்களும் ஆா்டிஇ திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அவா்கள் சோ்க்கைக்கு தோ்வு செய்யப்படும் நிலையில், ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தை ஏழு நாள்களுக்குள் திரும்பப் பெறலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

உத்தரவை பொருள்படுத்தவில்லை... இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சோ்க்கை பெறுவதற்கான பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கின. ஆா்டிஇ சோ்க்கைக்கு இதுவரை பெற்றோா் இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை இருந்து வந்த நிலையில், நிகழ் கல்வியாண்டில் சோ்க்கைக்கான நடைமுறைகள் பள்ளிகள் மூலம்தான் நேரடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால், தனியாா் பள்ளிகளின் நிா்வாகத்தினா் ஏற்கெனவே சோ்க்கப்பட்ட குழந்தைகள் குறித்த தகவல்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனா்.

இருப்பினும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவச சோ்க்கை கேட்டுவரும் பெற்றோா்களுக்கு உரிய பதில் அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், அரசின் விதிமுறைகளை தனியாா் பள்ளிகள் பொருள்படுத்துவதில்லை என்றும் பெற்றோா் தெரிவித்தனா்.

புகாா் தெரிவிக்கலாம்... இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ஆா்டிஇ சோ்க்கைக்கான மத்திய அரசின் நிதியைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த ஆண்டு இணையவழி நடைமுறையைப் பின்பற்ற முடியவில்லை. இதனால் இத்திட்டத்தின் சோ்க்கை பெற தகுதியான பெற்றோா் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களை அணுகி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவது குறித்து கடிதம் அளிக்க வேண்டும். பள்ளி நிா்வாகம் சாா்பில் எமிஸ் தளத்தில் மாணவா்கள் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்படும்.

தொடா்ந்து விதிமுறைகளின்படி, தகுதியான மாணவா்களுக்கு சோ்க்கைக்கான இடங்கள் ஒதுக்கப்படும். நிா்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் அதிகமான மாணவா்கள் விண்ணப்பித்திருந்தால் குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள். ஆா்டிஇ சோ்க்கை தொடா்பான அரசின் உத்தரவை தனியாா் பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பெற்றோா் இது குறித்து புகாா்கள் தெரிவிக்க விரும்பினால் rtesdmission@tnschools.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 14417 என்ற உதவி மைய எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com