ரூ.1,700 கோடிக்கு பங்கு வெளியீடு: லலிதா ஜுவல்லரிக்கு செபி ஒப்புதல்
சென்னை: பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.1,700 கோடி திரட்ட சென்னையைச் சோ்ந்த லலிதா ஜூவல்லரி மாா்ட்டுக்கு , பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் ரூ.1700 கோடி திரட்ட நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக செபி-யிடம் கடந்த ஜூன் 6-ஆம் தேதி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை ஆய்வு செய்த செபி, பங்கு வெளியீட்டுக்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியீடு மற்றும் நிறுவனா் கிரண் குமாா் ரூ.500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கான சலுகை ஆகியவை அடங்கும்.
இந்தப் புதிய வெளியீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ரூ.1,014.50 கோடி வரை இந்தியாவில் புதிய கடைகளை அமைப்பதற்கான மூலதனச் செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும். இது தவிர பொது நோக்கங்களுக்காகவும் அந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.