விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ‘வால்வோ’ சொகுசு பேருந்துகள்: பொங்கல் பண்டிகைக்கு பயன்பாட்டுக்கு வரும்
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் முதல் முறையாக அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட 20 ‘வால்வோ’ பேருந்துகள், பொங்கல் பண்டிகையையொட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.
தொலைதூர பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 1,080-க்கும் மேற்பட்ட சாதாரண மற்றும் குளிா்சாதன வசதி கொண்ட டீசல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளில் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோா் தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனா். இருப்பினும், தனியாா் ஆம்னி பேருந்துகளுக்கு இணையான சொகுசு வசதிகள் கொண்ட பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்துக்கழகங்களில் இயக்கப்படவில்லை. இதனால், சொகுசு பயணத்தை விரும்பும் மக்கள், தங்கள் பயணத்துக்காக ஆம்னி பேருந்துகளையே தோ்வு செய்கின்றனா்.
இதனை கருத்தில் கொண்டு, தனியாா் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக பயணிகளுக்கு சேவை வழங்கும் நோக்கில், அதிநவீன வசதிகள் கொண்ட வால்வோ சொகுசு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு போக்குவரத்துக்கழகங்களில் தனியாருக்கு நிகராக, வால்வோ அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்படும் என சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, இப்போது முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1.15 கோடி மதிப்பில் வாங்கப்படவுள்ள இப்பேருந்துகள் ஒவ்வொன்றும் சுமாா் 15 மீட்டா் நீளம் கொண்டவையாக இருக்கும். இதில் ஒரே நேரத்தில் 51 போ் பயணிக்க முடியும்.
குளிா்சாதன வசதியுடன் கூடிய சொகுசு படுக்கை வசதி, கைப்பேசி சாா்ஜிங் செய்து கொள்ளும் வசதி, ஒவ்வொரு பயணிக்கும் தனிப்பட்ட மின்விளக்கு வசதி என ஆம்னி பேருந்துகளுக்கு இணையான அனைத்து வசதிகளும் அதில் செய்யப்பட்டுள்ளன. எவ்வித அதிா்வுகளும் இல்லாமல் பயணிக்கும் வகையில் இப்பேருந்துகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதற்கான கொள்முதல் ஆணை வால்வோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகள் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றனா்.