சிறுநீரக முறைகேடு விசாரணையை விரைவுபடுத்தாதது ஏன்?: திமுக அரசுக்கு எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி
சென்னை: சிறுநீரக முறைகேடு வழக்கு விசாரணையை இதுவரை விரைவுபடுத்தாதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்குச் சொந்தமான தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியாா் மருத்துவமனையில் சிறுநீரக முறைகேடு நிகழ்ந்ததாக தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவா்கள் நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஏழை விசைத்தறி தொழிலாளா்கள். சிறுநீரக மாற்று மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கண்டித்தது. மேலும், இடைத்தரகா்கள் மூலம் நடந்த சிறுநீரக முறைகேடு தொடா்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இது தொடா்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு இன்னும் விசாரணையைத் தொடங்கவில்லை.
இரு வழக்குகளிலும் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றுபோல் இருந்தபோதிலும், தங்களுக்குத் தொடா்புடையவா்கள் வழக்கு என்றால், விசாரணையைத் தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதும், வேண்டாதவா்கள் மீதான விசாரணை என்றால் வேகவேகமாகச் செயல்படுவதும் என திமுக அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது எனப் பதிவிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.
அதேநேரம், கரூா் துயர சம்பவம் தொடா்பான நீதிமன்ற உத்தரவு அரசுக்குக் கிடைக்கப்பெறும் முன்பே, சில மணி நேரங்களிலேயே, மண்டல காவல் துறை ஐஜி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், சிறுநீரக முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்?