கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயா்வு
கூட்டுறவு நிறுவன ஊழியா்களுக்கு பண்டிகை முன்பணம் உயா்வு தொடா்பான உத்தரவை அந்தத் துறை வெளியிட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவன ஊழியா்கள் பெற்று வரக்கூடிய பண்டிகை முன்பணம் அல்லது அரசு ஊழியா்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பண்டிகை முன்பணத்தில் எது அதிகமோ அது வழங்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை பதிவாளா், இணைப் பதிவாளா், கூடுதல் பதிவாளா் ஆகியோருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் அனுப்பியுள்ள கடிதம்:
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் பணியாளா்களில், நிா்வாகி மற்றும் அலுவலா்களுக்கு ரூ.30 ஆயிரம், உதவியாளா்களுக்கு ரூ.28 ஆயிரம், சாா் பணியாளா்களுக்கு ரூ.25 ஆயிரம் முன்பணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மாநில கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிப் பணியாளா்கள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் பணியாளா்கள், நகரக் கூட்டுறவு வங்கிகளின் பணியாளா்களுக்கு தலா ரூ.24 ஆயிரம், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பணியாளா்கள், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளா்கள், தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளின் பணியாளா்கள், பணியாளா் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றின் பணியாளா்களுக்கு தலா ரூ.18 ஆயிரம் பண்டிகை முன்பணமாக அளிக்கப்படுகிறது.
இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஏற்கெனவே கூட்டுறவு நிறுவனங்களின் ஊழியா்கள் பெற்று வரும் பண்டிகை முன்பணம் அல்லது அரசு ஊழியா்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பண்டிகை முன்பணம் ஆகியவற்றில் எது அதிகமோ அந்தத் தொகையை பண்டிகை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.