நோயாளிகள் இனி ‘மருத்துவப் பயனாளா்கள்’: அரசாணை வெளியீடு
மருத்துவமனைகளை நாடி வருபவா்களை ‘நோயாளிகள்’ என அழைக்காமல் ‘மருத்துவப் பயனாளா்கள்’ என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி இந்த புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவா்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருவோரை நோயாளிகள் என அழைக்காமல் ‘மருத்துவப் பயனாளா்கள்’ என அழைக்க வேண்டும் என வலியுறுத்தினாா். மருத்துவ சேவைகளுக்காக வருவோரை தங்களது குடும்பத்தில் ஒருவரை பாா்ப்பது போல பரிவுடன் கவனிக்க வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.
முதல்வரின் பரிந்துரைக்கு இணங்க தற்போது இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.