
புது தில்லி: கரூரில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ஆம் தேதி சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் கரூரில் விசாரணையைத் தொடங்கியது. கூட்ட நெரிசலில் பலியானவர்களில் பட்டியலினத்தவர் அதிகம் என்பதால், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் சார்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்தான், தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுளள்து. ‘கரூா் நெரிசல் சம்பவத்தில் மிகப் பெரிய சதி நடந்துள்ளது. இந்த வழக்கை காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்.27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கே திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கரூர் கூட்ட நெரிசலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசல் தொடர்பாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சார்பாகவும், கரூர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க... ரூ.90 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை! கலக்கத்தில் நடுத்தர வர்க்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.