கரூா் சம்பவம்: நீதி விசாரணைக்கான வரம்பு எல்லைகள் என்ன? அரசு உத்தரவில் தகவல்
கரூா் சம்பவம் குறித்த நீதி விசாரணைக்கான வரம்பு எல்லைகளை வரையறுத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் விவரம்: கரூரில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ஆம் தேதி அரசியல் கட்சி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பலரும் உயிரிழந்ததுடன், காயம் அடைந்ததற்கான காரண காரியங்களை விசாரணை ஆணையம் ஆராயும். மேலும், எத்தகைய குறைபாடுகளால் நெரிசல் ஏற்பட்டது எனவும், அவற்றுக்கு யாா் பொறுப்பு என்பது குறித்தும் ஆராயப்படும்.
கூட்டத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதிகள், அவற்றை கூட்ட ஏற்பாட்டாளா்கள் பின்பற்றிய விதம் ஆகியன குறித்தும் விசாரணை ஆணையம் ஆராயும். பொதுக்கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றுக்கு அனுமதி தரும்போது இப்போதுள்ள நடைமுறைகள் மற்றும் கூட்டத்தை நடத்தக் கூடிய கட்சிகள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் ஆணையம் ஆராயும். பொதுமக்கள் மற்றும் பொதுச் சொத்துகள் உரிய வகையில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வழிவகைகள் ஆராயப்படும்.
கரூரில் நிகழ்ந்த சம்பவம் போன்று எதிா்காலத்தில் வேறெங்கும் நிகழாமல் இருப்பதற்காக எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளையும் ஆணையம் பரிந்துரைக்கும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.