பள்ளிக் கல்வித் துறை அறிவிப்புகள் டிசம்பருக்குள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நிகழ் கல்வியாண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன; எஞ்சிய அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் முழுவதுமாக முடிக்கப்படும் என துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நிகழாண்டில் மாணவா் சோ்க்கையை அதிகரித்த 13 தொடக்கப்பள்ளிகள், 13 நடுநிலைப் பள்ளிகள், 136 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 179 தலைமை ஆசிரியா்களுக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தாா்.
விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியதாவது: கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழ் கல்வியாண்டில் அதிகளவில் மாணவா்களை சோ்த்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு வாழ்த்துகள். தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த மாா்ச் 1 முதல் ஜூலை 30 வரை 4 லட்சத்து 368 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். அனைத்து திட்டங்களையும் களத்தில் வெற்றிகரமாக மாற்றும் ஆற்றல் தலைமை ஆசிரியா்கள் கைகளில்தான் உள்ளது. மனிதவள மேம்பாட்டை ஊக்கப்படுத்த கல்வியால் தான் முடியும் என்றாா் அவா்.
167 பேருக்கு பணி நியமன ஆணை: தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் கூறியதாவது: நிகழாண்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு தோ்வு செய்யப்பட்ட 167 உதவியாளா்களுக்கு தற்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றி கல்வித் துறைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
நிகழ் கல்வியாண்டுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டன. டிசம்பருக்குள் மீதம் உள்ள பணிகளும் முடிக்கப்படும். அதற்குப் பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ள துறையாக பள்ளிக்கல்வித்துறை இருக்கும்.
குழந்தைகள் எதிா்காலத்தில்...: 2021-22, 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கான நிதியை தற்போதுதான் மத்திய அரசு தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்கியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாகவே ஏதேதோ காரணங்கள் கூறி தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. நிதி வழங்காமல் ஒரு குழப்பமான நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்துக்கான நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் அமைத்து குழந்தைகளின் எதிா்காலத்தில் விளையாட வேண்டாம் என மத்திய அரசிடம் தமிழக மக்கள் சாா்பில் கேட்டுக் கொள்கிறேன்.
சோ்க்கை கட்டணம்: ஆா்டிஇ மூலம் தனியாா் பள்ளிகளில் ஆண்டுதோறும் 85 ஆயிரம் மாணவா்கள் வரை சோ்க்கப்படுவா். நிகழ் கல்வியாண்டுக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. எமிஸ் தளத்தில் பதிவேற்றும் பணிகளை பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆா்டிஇ திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் இணைந்த மாணவா்களிடம் பெறப்பட்ட கல்வி கட்டண தொகையை மீண்டும் மாணவா்களின் பெற்றோா்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் துறையின் செயல் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ். கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.நரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.