
செய்யறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும், மின் கட்டணம் உயரவும் வாய்ப்புள்ளதாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.
செய்யறிவு தொழில்நுட்பம் அறிமுகமாகி மிக வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில், அது ஒரு பிரிவினருக்கு நன்மையாக இருந்தாலும் மறுபுறம், பல்வேறு துறைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பலரும் வேலையிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்யறிவு குறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில்,
"அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் ஏதென்ஸில் 2023 முதல் மின் கட்டணம் 60% அதிகரித்துள்ளது. ஏனென்றால் புதிய செய்யறிவு தரவு மையத்தால் அதிக மின்சாரம் தேவைப்பட்டதன் காரணமாக...
தற்போதைய அதிநவீன செய்யறிவு தொழில்நுட்பம் பற்றி குறைத்து மதிப்பிடப்பட்ட உண்மைகளில் ஒன்று, அது அசாதாரண திறனைக் கொண்டிருக்கவில்லை.
இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பிரச்னை. நம்மால் அனைத்து கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளையும்(GPU) வாங்க முடிந்தாலும்(இல்லாவிட்டாலும்) நம்மால் மின் கட்டணத்தைச் செலுத்த முடியாது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
நமக்கு அதிக திறன் கொண்ட செய்யறிவு தேவைதான். ஆனால் அதற்கு தேவையான அம்சங்களைக் கணக்கிட்டு மறுபரிசீலனை செய்வது அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஏதென்ஸில் உள்ள தரவு அறிவியலாளர் நிக் ஹியூபர் என்பவரின் பதிவைப் பகிர்ந்து இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
நிக் ஹியூபரின் பதிவில், "மிகப்பெரிய பேரழிவாக ஏஐ, வீழ்ச்சியைச் சந்திக்கப் போகிறது. கடந்த 2023 லிருந்து என்னுடைய மின் கட்டணம் 60% அதிகரித்துள்ளது. கடந்த 24 மாதங்களில் மின் கட்டணம் 6 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இப்பகுதியில் 20+ தரவு மையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதனால் 99% மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.