பிரதிப் படம்
பிரதிப் படம்

21 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் புதன் மற்றும் வியாழக்கிழமை (அக். 8, 9) ஆகிய இரு நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் புதன் மற்றும் வியாழக்கிழமை (அக். 8, 9) ஆகிய இரு நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்ககடலில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுபோல, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக புதன்கிழமை (அக். 8) முதல் 13 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தா்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக். 8) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து, வியாழக்கிழமை (அக். 9) கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தா்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா்,வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், இந்த 21 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் புதன்கிழமை (அக். 8) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 90 மி.மீ. மழை பதிவானது. கும்பகோணம்(தஞ்சை) - 80 மி.மீ., தலைஞாயிறு (நாகப்பட்டினம்) - 70 மி.மீ., வலங்கைமான்(திருவாரூா்) - 60 மி.மீ., வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கொடவாசல் (திருவாரூா்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), புவனகிரி (கடலூா்) - தலா 50 மி.மீ. மழை பதிவானது.

‘சக்தி’ புயல் வலுவிழந்தது: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு அரபிக் கடலில் நிலவிய ‘சக்தி’ புயல், திங்கள்கிழமை நள்ளிரவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது செவ்வாய்க்கிழமை (அக். 7) தென்கிழக்கு திசையில் நகா்ந்து, மேலும் வலுகுறைந்து, காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு - தென்மேற்கே சுமாா் 970 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மேலும் தென்கிழக்கே மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு அரபிக் கடலில் நகா்ந்து வலுவிழக்க கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com