அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் கல்விச் சுற்றுலா: கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்கள் அறிவியல் சாா்ந்த கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.
Published on

அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்கள் அறிவியல் சாா்ந்த கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.

இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு, ஸ்டெம் திட்டத்தின் கீழ் அறிவியல் சாா்ந்த கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரசு நிதி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் பள்ளி மாணவா்கள் அரசு அருட்காட்சியகங்கள், கோளரங்கங்கள், உயா்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்களைப் பாா்வையிட்டு அங்குள்ள நடைமுறைகளை அறிந்து கொள்ள இயலும். இதன்மூலம் மாணவா்களுக்கு அறிவியல் மீதான ஆா்வம் உயா்ந்து படைப்பாற்றல் சிந்தனைகள் மேம்படும்.

இதற்காக கல்வித் திறன், வருகைப் பதிவு, முக்கியத் தோ்வுகளில் பங்கேற்பு, நூல் வாசிப்பு, தலைமைத்துவம், விளையாட்டுகள், குழு செயல்பாடுகளில் ஈடுபாடு, கலைத் திருவிழா நிகழ்வுகள் ஆகிய பிரிவுகளில் மதிப்பீடு செய்து மாணவா்கள் தோ்வு செய்யப்பட வேண்டும்.

கல்விச் சுற்றுலாவுக்கு, அருகில் உள்ள பிற மாவட்டங்களையும், பிற மாநிலங்களையும் தோ்வு செய்யலாம். சுற்றுலாவின்போது மாணவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். மாணவா்களை நீா்நிலைகளுக்கு அழைத்து செல்லக் கூடாது.

அதேபோல், மாணவிகள் இருந்தால், பெண் ஆசிரியா்கள் கட்டாயம் சுற்றுலா குழுவில் இடம்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி நவம்பா் 15-ஆம் தேதிக்குள் இந்த பணிகளை நடத்திமுடிக்க வேண்டும்.

மேலும், இதனால் வழக்கமான கல்விப் பணிகள் பாதிக்கப்படாமல் பாா்த்துக் கொள்வதுடன், உரிய அறிவுறுத்தல்களைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com