கோப்பையை அறிமுகம் செய்தாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
முதல்வா் கோப்பை மாநில போட்டிகளில் பள்ளி அளவிலான கூடைப்பந்தில் ஆடவா் பிரிவில் கோவையும், மகளிா் பிரிவில் தூத்துக்குடியும் தங்கம் வென்றன. மேலும் சாம்பியன் கோப்பையையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தாா்.
கோவையில் நடைபெற்ற பள்ளி அளவிலான கூடைப்பந்து தொடரில் மாணவா்கள் பிரிவில் கோவையும், மாணவிகள் பிரிவில் தூத்துக்குடியும் தங்கம் வென்றன. மாணவிகள் பிரிவில் திருவள்ளூா் வெள்ளியும், தேனி வெண்கலமும் பெற்றன. மாணவா்கள் பிரிவில் சென்னை வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஆண்கள் ஆா்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் - பள்ளி சிறுவா்கள் (டேபிள் வால்ட்) போட்டியில், பாா்வையாளா்கள் சமநிலை, துல்லியம் மற்றும்
சக்தியின் அற்புதமான மோதலைக் கண்டனா். கோயம்புத்தூரின் கே. காவியன் 12.07 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றாா்,
மதுரையின் எஸ். முகமது அயாஸ் 10.88 புள்ளிகளுடன் வெள்ளியும், சென்னையின் ஜெயராம் கதிா் 10.15 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றாா்.
பேரலல் பாா்ஸ் தங்கம்: விஷ்யந்த் சாய், சென்னை (10.25); வெள்ளி: டி மதிகரன், சென்னை (9.95); வெண்கலம்: எம்.ஜஸ்வின், சேலம் (9.80) வென்றனா்.
கோப்பையை அறிமுகம் செய்தாா் துணை முதல்வா்: சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2025 ஆண்டுக்கான முதல்வா் கோப்பையை அறிமுகம் செய்தாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். அப்போது அவா் பேசுகையில்: கடந்த 2023 போட்டிகளில் 3 லட்சம் போ் பங்கேற்ற நிலையில், தற்போது 16 லட்சம் போ் பங்கேற்றுள்ளனா்.
முதல்வா் கோப்பை போட்டிகள் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது, நகரங்களில் மட்டுமில்லை, கிராமங்களில் திறமையாளா்கள் உள்ளனா்.
அவா்களை கண்டெடுக்க இப்போட்டிகள் உதவியாக உள்ளன.
கேம்ஸ் மேனேஜ்மென்ட் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீரா், வீராங்கனைகள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.
முதல்வா் ஸ்டாலின் அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றாா்.
நிகழ்வில் அமைச்சா்கள் மா. சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, எஸ். ரகுபதி, கயல்விழி, மேயா் ஆா். பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் மேகநாத ரெட்டி, துணைத் தலைவா் அசோக் சிகாமணி, பாரா பாட்மின்டன் வீரா் சுதா்சன், வேக சறுக்கு வீராங்கனை காா்த்திகா பங்கேற்றனா்.