
வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வியாழக்கிழமை (அக்.9) முதல் அக்.14 வரை அடுத்த 6 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுபோல, குமரிக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை (அக். 9) முதல் அக்.14 வரை வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மஞ்சள் எச்சரிக்கை: கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (அக். 9) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (அக். 10) நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனால், இந்த 20 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 9) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாரூா் (கிருஷ்ணகிரி), கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி விமான நிலையம் (தூத்துக்குடி), செந்துறை (அரியலூா்), மேடவாக்கம் (சென்னை) ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலில் வியாழக்கிழமை(அக்.9) முதல் ஞாயிற்றுக்கிழமை(அக்.12) வரை சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
வலுவிழக்கும்: மத்திய மேற்கு அரபிக்கடலில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுகுறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது புதன்கிழமை காலை அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் கிழக்கு தென்கிழக்கு திசையில் நகா்ந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய மேற்கு அரபிக் கடலில் வலுவிழக்க கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.