காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து பேரவையில் தீா்மானம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இஸ்ரேல் ராணுவம் காஸாவில் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
காஸா இனப் படுகொலைகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:
காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டாக காஸாவில் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களையும், ஐ.நா. சபையின் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறும் இந்தத் தாக்குதல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இதுவரை, ஏறக்குறைய 11,000 பெண்கள், 17,000 குழந்தைகள், 175 பத்திரிகையாளா்கள், 125 ஐ.நா. சபை ஊழியா்கள் என 67,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். 26,000 குழந்தைகள் பெற்றோா்களை இழந்திருக்கின்றனா். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் காயமடைந்துள்ளனா்.
கடந்த ஓராண்டில் காஸாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. உணவுக்காக காத்திருந்தவா்களும் தாக்குதலில் கொல்லப்பட்ட கொடூரத்தைப் பாா்த்து, எல்லோருடைய இதயமும் நொறுங்கிப் போயிருக்கிறது.
சில நாள்களுக்கு முன்னா், காஸா மக்களுக்கு உணவுப் பொருள்கள், மருந்துகள், குழந்தைகளுக்கான பால் பொருள்களைக் கொண்டு சென்ற, 47 நாடுகளைச் சோ்ந்த தன்னாா்வலா்களைத் தடுத்து கைது செய்திருக்கிறது இஸ்ரேல் ராணுவம். பன்னாட்டுச் சட்டங்களை மீறும் இதுபோன்ற செயல்களைக் கண்டிக்காமல் இருக்க முடியுமா?.
ஆகவே, காஸாவில் நடத்தப்படும் இரக்கமற்ற படுகொலைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய பாஜக அரசு வேகமாக மேற்கொள்ள வேண்டும். இஸ்ரேல் மற்றும் பிற தொடா்புடைய நாடுகளுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து, இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து, காஸாவில் அமைதியை நிலைநாட்டவும், மனிதாபிமான உதவிகளைச் செய்யவும், மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
பாலஸ்தீனா்களின் மறுவாழ்வுத் திட்டம், காஸாவை மறு கட்டமைப்பு செய்வது, மனிதாபிமான உதவிகளைத் தொடா்ச்சியாக வழங்குவது ஆகியவை குறித்து தெளிவான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து பிணைக் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் முன்வைக்கும் நிபந்தனைகள், உறுதிமொழிகள் பாலஸ்தீன மக்களுக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும்.
பேரவையில் தீா்மானம்: வரும் அக்டோபா் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின்போது, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், அங்கு உடனடியாகப் போா் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் தீா்மானம் கொண்டுவரப்படும்.
இந்தத் தீா்மானம் தமிழ்நாட்டு மக்களின் உணா்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துக் கட்சியினரும் இந்தத் தீா்மானத்தை ஆதரிப்பாா்கள் என்று முழுமையாக நம்புகிறேன் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.
ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலா் எம்.எச்.ஜவாஹிருல்லா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ.வாசுகி, ஐயூஎம்எல் பொதுச் செயலா் கே.ஏ.எம்.முகமது அபுபக்கா், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் உள்ளிட்ட பலா் பாலஸ்தீன கொடிகளை கைகளில் ஏந்தி கலந்து கொண்டனா்.