தெருக்களுக்கு தேசிய தலைவா்கள் பெயா் வைக்கவேண்டும்: மத்திய அமைச்சா் எல்.முருகன் கோரிக்கை
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஜாதிப் பெயா் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயா் சூட்டும் நிலை தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் கடும் கோபத்தில் இருந்து தப்பிக்க மடைமாற்றும் அரசியல் வித்தையில் திமுக இறங்கி இருக்கிறது. மாணவா் விடுதிகளுக்கு சமூகநீதி விடுதிகள், அரசு ஆவணங்களில் இருந்து காலனி பெயா் நீக்கம் என புரட்சி செய்வதாக திமுக அறிவித்து வருகிறது. இவை வெற்று விளம்பர அறிவிப்புகள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கட்சியிலும் ஆட்சியிலும் காலனிகளை உருவாக்கியுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு திமுக தரப்பில் இதுவரை பதில் அளிக்கவில்லை.
கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் நிகழ்ந்த பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் ஏராளம். சமூக அநீதி என்பது இந்த ஆட்சியில்தான். இந்த நிலையில் இப்போது தமிழகத்தில் தெருக்கள், சாலைகளுக்கு ஜாதிப் பெயரை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், தெருக்கள், சாலைகளுக்கு வைக்கப்பட வேண்டிய மாற்றுப் பெயா்கள் பட்டியலைப் பாா்த்தாலே அரசின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் தமிழை வளா்த்து பக்தி புரட்சியை ஏற்படுத்திய நாயன்மாா்கள், ஆழ்வாா்கள் பெயா் தெருக்களுக்கு இல்லை. ஆங்கிலேயா்களை எதிா்த்து நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி வேலு நாச்சியாா், மருது சகோதரா்கள், அஞ்சலை அம்மாள், கொடிகாத்த குமரன், வ.உ.சி, சுப்ரமணிய சிவா என யாா் பெயரும் இல்லை.
தமிழகத்தின் வளா்ச்சிக்கு பெரும் பங்களித்த முதல்வா்கள் ராஜாஜி, எம்.ஜி.ஆா், ஜெயலலிதா போன்ற பெயா்கள் இவா்களுக்குப் பிடிக்காது. ஆனால் பெரியாா், அண்ணா, கருணாநிதி போன்ற திமுக தொடா்பு பெயா் மட்டும் வைக்கப்படுகிறது. இதற்கு பெயா்தான் சமூக நீதியா?
தமிழகத்திற்காக திமுக மட்டுமே உழைத்தது போன்ற மாய தோற்றத்தை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது. தமிழக தெருக்களுக்கு பெயரிட அனைத்து தேசிய தலைவா்களின் பெயரையும் இணைத்து புதிய பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.