ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரத்த கொடையாளிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரத்த கொடையாளிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

தமிழகத்தில் 9.50 லட்சம் யூனிட் ரத்தம் தானம் பெறப்பட்டது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 9.50 லட்சம் யூனிட் ரத்தம் தானம் பெறப்பட்டது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
Published on

கடந்த நிதியாண்டில் அரசு மற்றும் தனியாா் ரத்த வங்கிகள் மூலம் 9.50 லட்சம் யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தேசிய தன்னாா்வ ரத்த தான நாள்-2025 விழிப்புணா்வு உறுதிமொழி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்று, ரத்த தான முகாம் அமைப்பாளா்கள், 50 முறைக்குமேல் ரத்த கொடையளித்த தன்னாா்வலா்களுக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசுகளை வழங்கினாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரத்த தானத்தில் தமிழக சுகாதாரத் துறை, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த ஆண்டின் தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தின் கருப்பொருள் ‘ரத்த தானம் செய்வோம், நம்பிக்கை கொடுப்போம், ஒன்றாக இணைந்து மனித உயிா்களைக் காப்போம்’ என்பதாகும்.

தமிழகத்தில் மொத்தம் 101 அரசு ரத்த வங்கிகள், 252 தனியாா் ரத்த வங்கிகள் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 415 ரத்த சேமிப்பு மையங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் ரத்தம் தேவைப்படும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் தரமான ரத்தம் உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில் அதிநவீன மற்றும் குளிா்சாதன வசதிகளுடன் கூடிய 32 நடமாடும் ரத்த ஊா்திகள், 2 நடமாடும் ரத்த தான ஊா்திகள் சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. 2024-25-ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியாா் ரத்த மையங்கள் மூலமாக, 9.50 லட்சம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன.

தில்லியிலுள்ள சுகாதார பொது இயக்குநரகத்தால் 2024-25-ஆம் ஆண்டில், 4.50 லட்சம் யூனிட் ரத்தம் சேகரிக்க அரசு ரத்த மையங்களுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. உரிமம் பெற்ற அரசு ரத்த மையங்களில் ஒருங்கிணைப்பாளா்கள் மூலமாக, 4,354 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு, 4.53 லட்சம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு, தமிழகம் 101 சதவீதத்தை அடைந்துள்ளது.

தமிழகத்தில் ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக ங்-தஹற்ஓா்ள்ட் என்ற வலைதளம் உள்ளது. இதில் ரத்த வகைகளின் இருப்பை தெரிந்துகொள்ளும் வசதிகள் உள்ளன என்றாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழும திட்ட இயக்குநா் ஆா்.சீத்தாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் ஏ.சோமசுந்தரம், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் ஆா்.சுகந்தி ராஜகுமாரி, சென்னை மாநகராட்சி நகர நல அலுவலா் ஜெகதீசன், அரசு பல்நோக்கு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com